Monday, June 1, 2009

ஏனிந்த வாழ்வு...?

தினமும் விடிகிறது..தினமும் அடைகிறது.. வயிற்றுக்கும், செவிக்கும் ஏதாவது ஈயப்பட்டு பொழுதும் கழிந்து கொண்டிருக்கின்றது. இளமையின் துள்ளலும், துடிப்பும் இறுதிவரை வராது என்ற எண்ணம் இல்லாது, 'இன்றே நிஜம், நாளை வெறும் கனவு' என்று மனம் போகின்ற போக்கில் போய்க்கொண்டிருக்கின்றது வாழ்க்கை. 'இன்றே நிஜம்' என்று நினைத்து வாழ்வது சரிதான், நாளை என்ற ஒன்று இல்லை என்ற நினைவினைக் கருத்தில் கொண்டு! ஆனால், நம்மில் பெரும்பாலோர், அப்படி நினைப்பதில்லையே!

இன்றைய யுகத் தேடலுக்கும், பொருளுக்கும், பொன்னுக்கும், பெண்ணுக்கும் ஓடிக்கொண்டிருக்க வேண்டியதாயிருக்கையில், எங்கே நேரமிருக்கின்றது வாழ்வைப் பற்றி யோசிக்க?

என்றாவது யோசித்திருக்குமா இந்த மனசு, எதற்காக இந்த வாழ்க்கையென்று?! அப்படியே யோசித்தாலும், சில மணித் துளிகளிலேயே வேறு சிந்தனையை நோக்கிச் செல்லும். இளம் வயதில் மனசு அவ்வளவு சீக்கிரம் பக்குவப் பட்டு விடாது, எல்லோருக்கும்! வயதான காலத்திலேயே பக்குவப் பட மறுக்கிற மனிதர்கள் இருக்கின்ற போது, இளம் வயதில் எப்படி பக்குவத்தினை எதிர்பார்க்க முடியும்?

ஆனால்.. அது அல்ல வாழ்க்கை. இளம்வயதிலேயே இத்தகு விசயங்கள் பிடிபட ஆரம்பிக்க வேண்டும். அப்போதுதான், முதுமை இனிக்கும். முடிவு என்பது முதுமையில் மட்டும்தான் வரவேண்டும் என்பதில்லை நியதி. எந்த வயதில் வந்தாலென்ன, முடிவு என்பது உறுதி என்ற எண்ணம் என்றைக்கும் சிந்தையிலிருக்க வேண்டும்.

இன்றோடு உன் வாழ்வு முடிகிறது என்றறிந்தால், உன் சக மனிதர்களிடம் கோபிப்பாயா? எரிந்து விழுவாயா? பொருளை அபகரிக்க நினைப்பாயா? பொய்யும், புரட்டலும்தான் செய்வாயா? இல்லையல்லவா...! எல்லோரிடத்தும் நல்லவனாய், அன்பாய், செய்த தவறுகளுக்கு வருத்தம் தெரிவிப்பவனாய் அல்லவா இருக்க முயலும்!.

யோசியுங்கள் நண்பர்களே! ஒரு சமுதாயம் நல்லதாய் இருக்க வேண்டுமானால், அதில் சார்ந்திருக்கின்ற தனிமனிதன் நல்லவனாய், நற்சிந்தை உள்ளவனாய் இருக்க வேண்டும்.

இன்றைய யுகத்தில், சாதுர்யமும், கசவாளித்தனமும்தான் விலை போய்க் கொண்டிருக்கின்றது. அப்படிச் செய்து கொண்டிருப்பவர்களிடம், நிம்மதியின்மையும், மன உளைச்சலும் குடிகொண்டிருப்பது கண்கூடு.

இது உன்மனம்.... உன் வாழ்வு... பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில்தான் உன் வாழ்வு. கூன்,குருடு, செவிடு, நொண்டி என்ற உடல் ஊனம் இல்லாமல் கிடைத்திருக்கின்ற மனித வாழ்வினை, மற்ற செயல் ஊனங்கள் தின்று விடாமல் இருக்க, வாழப் பழகு.

வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்தினையும் உண்மையாய்ச் செலவழிக்க வேண்டும். பொய்மை கலக்காமல், மெய்மையோடு மேன்புற வாழப் பழக வேண்டும்.

யாரடா இது புதிய புத்தனா என்று எண்ணாதீர்கள்! என் மனதோடு, நான் பேசும் பேச்சு.. என்னைப் போலுள்ளவர்களின் சிந்தனையையும் தூண்டட்டும் என்ற எண்ணம்தான்...

உங்களின் நற்சிந்தனையையும், பின்னூட்டமாய்த் தெரியுங்கள்!

5 comments:

goma said...

என் சிந்தனை ஓட்டமும் உங்கள் துள்ளலும் ஒன்று போல் உள்ளது .நானும் சமயங்களில் இது போல் யோசித்திருக்கிறேன்,யோசித்துக் கொண்டிருக்கிறேன் இன்னும் யோசிப்பேன்.

விடை தெரியும் முன் ,என்னை எழுப்ப சில கேள்விகள் தயாராக இருக்கும்
“சாப்பிடலாமா?
இன்னைக்கு என்ன சைட் டிஷ்,?
ஷர்ட் ஐயன் பண்ணியாச்சா....

goma said...

உங்கள் பதிவு என் மனதில் உசுப்பி விட்டிருக்கும் ,அல்லது வித்திட்டிருக்கும் எண்ணக் குவியலை விரைவில் பதிவிடுகிறேன் நன்றி

SurveySan said...

nicely written.

Bogy.in said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://www.bogy.in

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

Post a Comment