Tuesday, May 26, 2009

எண்ணும், எழுத்தும்

எண்ணும் எழுத்தும்
கண்ணெனத் தகுமாம்!

பிறப்பில் எவர்க்கும்
நல்லகண் கிட்டினாலும்,

வளர்கின்ற வளர்ப்பில்

சிலருக்கு நல்ல கண்!
சிலருக்கு ஊனக் கண்!

எண்ணும்,எழுத்தும்
ஊக்குவிக்க...
சொல்லும்,செயலுமே
பிரதிபலிக்கின்ற கட்டளைக்கல்லாம்!

சூழலும், எண்ணமும்

சூழலின் நிகழ்வுகள்
எண்ணங்களை எழுதத் தூண்டினாலும்,
எண்ணங்களின் வடிவங்கள்
நிகழ்வுகளை நிர்வாணிக்க
விழையாது!

புத்தியின் கட்டுப்பாட்டிலேயே
எண்ணங்களின் வடிவங்கள்
அரங்கேறும்!

நிறைய தருணங்களில்
அதுவே நிறைவைத்
தருவதாயும் இருக்கும்!

ஆனாலும் உள்மனசு
அவ்வப்போது அதன்
ஆட்டங்களை ஆடிக்கொண்டுதானிருக்கும்!

மனசுக்கும், புத்திக்கும்
நடுவே தடுமாறுகின்ற
எண்ணங்களின் சிதறல்கள்
எவ்வடிவம் பெறும்.. யாரறிவார்?

மலையடிவாரமும்..மனக்குதிரையும்..


அழகு மலையடிவாரத்தில்
குளிர்ந்த பனிப்பொழிவில்
அடர்ந்த பசலைகளின்
இடையில் மோதி வருகின்ற இளங்காற்று...
சட்டென்று மனசை லேசாக்கிப் போக்கிற்று...

ஓடுகின்ற மனசு
சற்றே நிதானிக்க எத்தனிக்கிறது..

காற்றின் சுழற்சி
தொடர்ந்தாற் போலில்லையே..

கிடைக்கின்ற இடைவெளியில்
மீண்டும் பயணிக்க ஆரம்பிக்கின்றது

கட்டடா இவன் மனதை
என்றே கட்டளை இட்டாலும்,
'எப்படிடா?' என்ற எகத்தாளத்துடன்
ஆர்ப்பரிக்கின்றது அலைபாய்கின்ற மனசு..

மனசு போகிற போக்கில்
போய்த்தான் பார்ப்போமே
என்ற எண்ணத்தில்தான்.. எழுத நினைக்கிறேன்..