Monday, June 1, 2009

ஏனிந்த வாழ்வு...?

தினமும் விடிகிறது..தினமும் அடைகிறது.. வயிற்றுக்கும், செவிக்கும் ஏதாவது ஈயப்பட்டு பொழுதும் கழிந்து கொண்டிருக்கின்றது. இளமையின் துள்ளலும், துடிப்பும் இறுதிவரை வராது என்ற எண்ணம் இல்லாது, 'இன்றே நிஜம், நாளை வெறும் கனவு' என்று மனம் போகின்ற போக்கில் போய்க்கொண்டிருக்கின்றது வாழ்க்கை. 'இன்றே நிஜம்' என்று நினைத்து வாழ்வது சரிதான், நாளை என்ற ஒன்று இல்லை என்ற நினைவினைக் கருத்தில் கொண்டு! ஆனால், நம்மில் பெரும்பாலோர், அப்படி நினைப்பதில்லையே!

இன்றைய யுகத் தேடலுக்கும், பொருளுக்கும், பொன்னுக்கும், பெண்ணுக்கும் ஓடிக்கொண்டிருக்க வேண்டியதாயிருக்கையில், எங்கே நேரமிருக்கின்றது வாழ்வைப் பற்றி யோசிக்க?

என்றாவது யோசித்திருக்குமா இந்த மனசு, எதற்காக இந்த வாழ்க்கையென்று?! அப்படியே யோசித்தாலும், சில மணித் துளிகளிலேயே வேறு சிந்தனையை நோக்கிச் செல்லும். இளம் வயதில் மனசு அவ்வளவு சீக்கிரம் பக்குவப் பட்டு விடாது, எல்லோருக்கும்! வயதான காலத்திலேயே பக்குவப் பட மறுக்கிற மனிதர்கள் இருக்கின்ற போது, இளம் வயதில் எப்படி பக்குவத்தினை எதிர்பார்க்க முடியும்?

ஆனால்.. அது அல்ல வாழ்க்கை. இளம்வயதிலேயே இத்தகு விசயங்கள் பிடிபட ஆரம்பிக்க வேண்டும். அப்போதுதான், முதுமை இனிக்கும். முடிவு என்பது முதுமையில் மட்டும்தான் வரவேண்டும் என்பதில்லை நியதி. எந்த வயதில் வந்தாலென்ன, முடிவு என்பது உறுதி என்ற எண்ணம் என்றைக்கும் சிந்தையிலிருக்க வேண்டும்.

இன்றோடு உன் வாழ்வு முடிகிறது என்றறிந்தால், உன் சக மனிதர்களிடம் கோபிப்பாயா? எரிந்து விழுவாயா? பொருளை அபகரிக்க நினைப்பாயா? பொய்யும், புரட்டலும்தான் செய்வாயா? இல்லையல்லவா...! எல்லோரிடத்தும் நல்லவனாய், அன்பாய், செய்த தவறுகளுக்கு வருத்தம் தெரிவிப்பவனாய் அல்லவா இருக்க முயலும்!.

யோசியுங்கள் நண்பர்களே! ஒரு சமுதாயம் நல்லதாய் இருக்க வேண்டுமானால், அதில் சார்ந்திருக்கின்ற தனிமனிதன் நல்லவனாய், நற்சிந்தை உள்ளவனாய் இருக்க வேண்டும்.

இன்றைய யுகத்தில், சாதுர்யமும், கசவாளித்தனமும்தான் விலை போய்க் கொண்டிருக்கின்றது. அப்படிச் செய்து கொண்டிருப்பவர்களிடம், நிம்மதியின்மையும், மன உளைச்சலும் குடிகொண்டிருப்பது கண்கூடு.

இது உன்மனம்.... உன் வாழ்வு... பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில்தான் உன் வாழ்வு. கூன்,குருடு, செவிடு, நொண்டி என்ற உடல் ஊனம் இல்லாமல் கிடைத்திருக்கின்ற மனித வாழ்வினை, மற்ற செயல் ஊனங்கள் தின்று விடாமல் இருக்க, வாழப் பழகு.

வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்தினையும் உண்மையாய்ச் செலவழிக்க வேண்டும். பொய்மை கலக்காமல், மெய்மையோடு மேன்புற வாழப் பழக வேண்டும்.

யாரடா இது புதிய புத்தனா என்று எண்ணாதீர்கள்! என் மனதோடு, நான் பேசும் பேச்சு.. என்னைப் போலுள்ளவர்களின் சிந்தனையையும் தூண்டட்டும் என்ற எண்ணம்தான்...

உங்களின் நற்சிந்தனையையும், பின்னூட்டமாய்த் தெரியுங்கள்!

Tuesday, May 26, 2009

எண்ணும், எழுத்தும்

எண்ணும் எழுத்தும்
கண்ணெனத் தகுமாம்!

பிறப்பில் எவர்க்கும்
நல்லகண் கிட்டினாலும்,

வளர்கின்ற வளர்ப்பில்

சிலருக்கு நல்ல கண்!
சிலருக்கு ஊனக் கண்!

எண்ணும்,எழுத்தும்
ஊக்குவிக்க...
சொல்லும்,செயலுமே
பிரதிபலிக்கின்ற கட்டளைக்கல்லாம்!

சூழலும், எண்ணமும்

சூழலின் நிகழ்வுகள்
எண்ணங்களை எழுதத் தூண்டினாலும்,
எண்ணங்களின் வடிவங்கள்
நிகழ்வுகளை நிர்வாணிக்க
விழையாது!

புத்தியின் கட்டுப்பாட்டிலேயே
எண்ணங்களின் வடிவங்கள்
அரங்கேறும்!

நிறைய தருணங்களில்
அதுவே நிறைவைத்
தருவதாயும் இருக்கும்!

ஆனாலும் உள்மனசு
அவ்வப்போது அதன்
ஆட்டங்களை ஆடிக்கொண்டுதானிருக்கும்!

மனசுக்கும், புத்திக்கும்
நடுவே தடுமாறுகின்ற
எண்ணங்களின் சிதறல்கள்
எவ்வடிவம் பெறும்.. யாரறிவார்?

மலையடிவாரமும்..மனக்குதிரையும்..


அழகு மலையடிவாரத்தில்
குளிர்ந்த பனிப்பொழிவில்
அடர்ந்த பசலைகளின்
இடையில் மோதி வருகின்ற இளங்காற்று...
சட்டென்று மனசை லேசாக்கிப் போக்கிற்று...

ஓடுகின்ற மனசு
சற்றே நிதானிக்க எத்தனிக்கிறது..

காற்றின் சுழற்சி
தொடர்ந்தாற் போலில்லையே..

கிடைக்கின்ற இடைவெளியில்
மீண்டும் பயணிக்க ஆரம்பிக்கின்றது

கட்டடா இவன் மனதை
என்றே கட்டளை இட்டாலும்,
'எப்படிடா?' என்ற எகத்தாளத்துடன்
ஆர்ப்பரிக்கின்றது அலைபாய்கின்ற மனசு..

மனசு போகிற போக்கில்
போய்த்தான் பார்ப்போமே
என்ற எண்ணத்தில்தான்.. எழுத நினைக்கிறேன்..