Saturday, December 13, 2014

லிங்கா - ரஜினியின் புதிய பரிமாணம்

பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் லிங்கா...இப்படத்தின் கதை ஊரறிந்த கதையாய் (பார்க்க பின்குறிப்பு  ) இருக்கையிலேயே, படம் வர இருக்கும் முன்னரே இது என் கதை..உன் கதை என அடிதடி...இந்த மாதிரி விசயங்கள் சீக்கிரமே தடைப்பட வேண்டும்.. இல்லையென்றால், பிரபலங்களின் படங்கள் என்றாலே, தயாரிப்பாளர், இம்மாதிரி சவால்களைச் சமாளிக்க, தனி பட்ஜெட் ஒதுக்க வேண்டும்...ம்ம்ம்...

ஒருவழியாய்ச் சமாளித்து வெளிவந்து கலக்கிக் கொண்டிருக்கிறது.

இந்தக் கதையினை அல்லது இதன் மூலத்தினை முன்னரே அறிந்திருந்ததால், இதனை ரஜினி ரசிகர்களின் தீனிக்கு, எப்படி கொடுக்கப் போகிறார் ரவிக்குமார் என்ற என் எதிர்பார்ப்பினை ஏமாற்றவில்லை ரவிக்குமார்...

ரசிகனுக்காக ஒரு ரஜினி- திருடனாக ஒரு லிங்கா...கதைக்காக ஒரு ரஜினி - ராஜா லிங்கேஸ்வரனாக ஒரு லிங்கா... என இரண்டு ரஜினியை வைத்து சுவாரஸ்யமாய்த் தந்து விட்டார்...

இந்தக் கதையைத் கேட்ட ரஜினியும், ரசிகனின் தீனிக்கு இது குறைவுதான் என்று தெரிந்தே இசைந்திருப்பார் போலும்... திருட லிங்காவை விட, ராஜ லிங்காவுக்கு மெனெக்கெட்டிருக்கிறார்...

அனுஷ்காவுடனான காதல் காட்சிகளில், தோற்றத்தில் இருக்கும் துள்ளல், நடிப்பில் இல்லை. தன் வயதையும் நினைத்து, மனது ஒட்டாமல் செய்த காட்சிகள் போன்ற உணர்வு...மீனாவுடனான மாடத்திலே கன்னி மாடத்திலே...'இருக்கி அணைச்சு ஒரு உம்மா தரு' இப்பவும் நினைவில் இருக்கிறதே...தலைவா..


சமூகம் சார்ந்த கதை என்பதாலும்..சூழலே எதிரி என்பதாலும்... வில்லனின் வேலை குறைவு என்பதாலும், வழக்கமான ரஜினி ஃபார்முலாக்கள் பயன்பட வாய்ப்பு இல்லாமல் போய்விடுகிற கதை..

ரஜினி ரசிகனாய் சற்றே ஏமாற்றம் தருவதைத் தவிர்க்க இயலாது....ஆனாலும் முழுமையாய் ரஜினியை திரையில் இளமையாய்ப் பார்க்க வைத்திருப்பதும், ரஜினியின் துள்ளலும், ஒரு எனர்ஜியைத் தருகிறது என்பது உண்மை.

'பஞ்ச்' டயலாக்குகள் என்று சொல்வதை விட, பொன்மொழிகள் என்பதுவே சரி..நிறையத் தூவியிருக்கிறார்கள்.. இருந்தாலும், தியேட்டரில் இருந்து வெளியே வரும்போது 'பராக்ஸ்' மட்டுமே மிஞ்சியிருக்கிறது...

சந்தானம் கூட்டணி சற்றே கை கொடுக்கிறது... ராஜாவைப் புகழ்வதும், ராஜா பதிலுக்கு இனிப்பான அன்பளிப்புகளை வாய்வார்த்தையாய்த் தருவதும் என அரதப்பழசான காமெடி ரஜினிக்கு...சிரிப்பு வரலை சாரே..

ரஹ்மானுக்கு என்ன ஆச்சு ..ம்ம்ம்.. பின்னனி இசை பின்னி பெடல் எடுத்திருக்க வேண்டாமோ? ரஜினி படத்தை ரஜினி ரசிகர்களே ஓட்டிவிடுவார்கள் என்ற தைரியம்!! உயிர்ப்பாய் இல்லை...

ரயில் ஃபைட் அருமை...படமாக்கிய விதமும் அருமை...

வைரமுத்து கதை தெரிந்துதான் பாடல் எழுதினாரா என்று தெரியவில்லை.... ராஜா ரஜினி கடமை உணர்வோடும்..ஊருக்கு நல்லது பண்ணனும்ங்கிற எண்ணத்தில் முனைப்போடு இருக்கையில்..சோனாக்‌ஷியோடுடனான கனவுப்பாடல்  'சின்னச்சின்ன நட்சத்திரம்' பாடலில்

'பாலன்னம் நீ நான்
பசிகாரன் வா வா
மோகக் குடமே
முத்து வடமே
உந்தன் கச்சை மாங்கனி
பந்திவை ராணி'

என்று எழுதியிருக்கிறார்...நாயகனின் எண்ண ஓட்டத்திற்கும், பாடலுக்கும் ஒட்டவில்லை..கண்ணியம் காத்திருக்கலாம் அண்ணா...

பாடல்களின் படமாக்கம், ஷங்கரின் படச்சாயலை ஒட்டியிருப்பதை உணரமுடிகிறது..

கடைசி கிளைமாக்ஸில், ரஜினி பறக்கும் கிராஃபிக்ஸூம் சரி..பின்னனி இசையும் சரி.. தர வேண்டிய தாக்கத்தைத் தரவில்லை..

சாதாரணமான படம்தான்...ஆனால்...தூக்கி நிறுத்தியிருப்பது ரஜினி என்கிற பிரம்மாஸ்திரம்..

அப்பட்டமாய் பென்னி குயிக்கின் வாழ்க்கைச் சம்பவங்களின் தொகுப்பில், படத்தின் நிகழ்வுகள் இருக்கும்போது, டைட்டிலில் எல்லாம் கற்பனையே என்று போடுவதி என்ன நியாயம் ரவிக்குமார் சார்...

மொத்தத்தில் ...ரஜினி தன் வட்டத்தை விட்டு விலகாமலும், விலகியும் ஒரு புதிய முயற்சியில் பயணித்திருக்கிறார்...

தாராளாமாய் எல்லோரும் ஒருமுறை தியேட்டரில் பார்க்கலாம்....

-----------------------------------------------------------------------------------
 விகடனில் வெளியான கட்டுரையில் இருந்து ஒரு பகுதி....
'இந்தப் புவியில் நான் வந்தது என்பது ஒருமுறைதான். எனவே, நான் இங்கே ஒரு நற்செயலைப் புரிந்திட வேண்டும்; அதை உடனே நிறைவேற்ற வேண்டும். அதைத் தள்ளிவைப்பதற்கோ, தவிர்த்துவிடுவதற்கோ இடம் இல்லை. ஏனெனில், மீண்டும் ஒருமுறை நான் இந்தப் புவியில் வரப்போவது இல்லை!’ எனச் சொன்ன பென்னி குயிக், இறந்துவிடவில்லை; இதோ முல்லைப் பெரியாறு அணையில் 142 அடிக்கு மேல் எழுந்து நின்று எட்டிப் பார்த்துக்கொண்டிருக்கிறார்!
பென்னி குயிக், சீரியஸான ஆள் அல்ல; விளையாட்டுத்தனமானவர். அதுவும் கிரிக்கெட் மீது பெரும் கிறுக்கு உள்ளவர். இங்கிலாந்தில் இருந்து இங்கு வேலைபார்க்க வந்தபோது (1865-ம் ஆண்டு) சென்னை கிரிக்கெட் கிளப் செயலாளர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். அப்போது சென்னை - பெங்களூரு என இரண்டு பிரிவாகப் பிரிந்து ஒரு போட்டி நடந்திருக்கிறது. அதில் ஓர் அணிக்கு பென்னி குயிக் தலைவர். நீண்ட காலமாக இழுத்துக்கொண்டு இருக்கும் முல்லைப் பெரியாறு அணைத் திட்டத்தை, பிரிட்டிஷ் அரசு மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டிருந்த நேரமும் அது. போட்டி தொடங்கும் முன் பென்னி குயிக் ஜாலியாகச் சொன்னார், 'இதில் யார் வெற்றி பெறுகிறார்களோ, அவர்கள்தான் முல்லைப் பெரியாறு அணையைக் கட்டப்போகிறார்கள்’ என்று!
பென்னி குயிக் அணி வென்றது. அந்தச் சவாலை மனரீதியாகவே ஏற்க பென்னி குயிக் தயார் ஆனார். 'கலோனியல் ஜான் பென்னி குயிக்’ என, பெயரை அறிவித்தார் மகாராணி எலிசபெத். பென்னி குயிக், அப்போது ராணுவத் தலைமைப் பொறியாளராகப் பதவி வகித்தார். திட்டத்தின் அன்றைய மதிப்பு 17.5 லட்சம் ரூபாய்!
'முல்லைப் பெரியாறு’ என்ற பெயர், தந்தை பெரியாரின் நினைவாகச் சூட்டப்படவில்லை; காரணப் பெயர் அது. மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி ஓடும் ஆறுகளிலேயே பெரிய ஆறு இது என்பதால், 'பெரியாறு’ என மகுடம் சூட்டப்பட்டது. இது, சுமார் 56 கிலோமீட்டர் தூரம் வரை பாய்கிறது. சிறுசிறு நதிகளாக ஐந்து நதிகளைத் தன்னோடு இணைத்துக்கொள்கிறது. ஆறாவதாக 'முல்லை’ என்ற இன்னோர் ஆற்றையும் சேர்த்துக்கொள்கிறது. இந்த ஏழும் இணைந்துதான் தமிழக எல்லையைத் தாண்டி கேரளாவுக்குள் செல்கின்றன. அந்த மாநிலத்துக்குள் சுமார் 244 கிலோமீட்டர் தூரம் வரை ஓடி, கொச்சி அருகே அரபிக்கடலில் கடக்கிறது.
உற்பத்தியாகும் இடத்துக்கும் பயன்தராமல், ஓடிப்போய்ச் சேரும் இடத்துக்கும் பயன்தராமல் வீணாகக் கடலில் போய்ச் சேருகிறதே என்ற வருத்தத்தில் உதித்த சிந்தனைதான் முல்லைப் பெரியாறு அணை. இந்த வருத்தம், முதலில் ராமநாதபுரம் மன்னர் முத்துராமலிங்க சேதுபதிக்கு வந்தது. ஓர் அணையைக் கட்டி தண்ணீர் தேக்கினால் வறண்ட மாவட்டங்களை வளப்படுத்தலாம் என்ற யோசனையில் தன்னுடைய மந்திரியாக இருந்த முத்து இருளப்பப் பிள்ளையோடு 12 பேர் கொண்ட குழுவை அணை கட்ட இடம் பார்த்து வரச் சொன்னார். அந்தக் காடு, மலைகளுக்குள் முதலில் கால் பதித்த 12 பேர் இவர்கள்தான். அதன் பிறகுதான் பிரிட்டிஷ் அதிகாரிகள், மதுரை ஆட்சியராக வந்தவர்கள் கவனம் செலுத்தத் தொடங்கினர்.
பிறகு பற்பல தடைகளுக்குப் பிறகு 1887-ம் ஆண்டு வேலையைத் தொடங்கினார் பென்னி குயிக். 1895-ம் ஆண்டு அக்டோபர் 10-ம் நாள் அணை, திறப்பு விழா கண்டது. இந்த ஒன்பது ஆண்டுகளில் ஒருநாள்கூட நிம்மதியாகக் கழியவில்லை. அணை கட்டும் வேலை தொடங்கியது முதல், மழையும் பெய்து தீர்த்தது. ஓர் ஆண்டு கழிந்திருக்கும்... அதுவரை கட்டிய கட்டுமானத்தை ஒருநாள் நள்ளிரவில் யானைகள் கூட்டம் வந்து இடித்துத் தள்ளிவிட்டுப் போனது. இரண்டு ஆண்டுகள் கழிந்திருக்கும்... தொடர் மழையால் மண் தடுப்பு மொத்தமும் தகர்ந்தது. வேலையில் இருந்த மொத்த பேரும் கைகோத்து மனிதக் கேடயமாக மாறி, நீர்ப் பெருக்கைத் தடுத்து நிறுத்தினார்கள். யானை இடித்ததும்... மழை கரைத்ததையும் மீண்டும் எழுப்ப வேண்டுமானால் கூடுதல் நிதி தேவை. சென்னைக்கு வந்தார் பென்னி குயிக். பணம் கேட்டு நின்றார்; மறுத்துவிட்டார்கள்.
அதைவிட அவமானம்... 'உனக்கு அணை கட்டத் தெரியவில்லை. தேவை இல்லாமல் செலவு செய்துவிட்டாய்’ எனக் கண்டித்தார்கள். 'உண்மையில், இவ்வளவு பணத்தை அதற்குச் செலவு செய்ததாகத் தெரியவில்லையே’ எனச் சந்தேகமும் எழுப்பினர். விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டது. வருந்திய மனநிலையில் 'எல்லாவற்றையும் விட்டுவிடலாம்’ என லண்டன் போனார். திரும்பி வரும்போது 45 லட்சம் ரூபாய் பணத்துடன் வந்தார். அது, அரசாங்கப் பணம் அல்ல; அவரது சொந்தப் பணம். தனது சொத்துக்களை விற்று எடுத்து வந்த பணம். அணையைக் கட்டி முடிப்பதுதான் அவரின் ஒரே லட்சியம். அணை திறக்கப்பட்ட பிறகு சொன்னார், 'நான் என்ன சொன்னாலும் யாரும் நம்பப்போவது இல்லை. எனவே, நான் மௌனமாகவே இருந்தேன். அணை எழுப்பப்பட்டுவிட்டது. இனி அணை பேசும்!’ - அப்போது முதல் இப்போது வரை பென்னி குயிக்கைப் பற்றித்தான் அந்த மக்கள் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். பாட்டன், முப்பாட்டன் மரியாதை அவருக்கு.
அவரைக் கடவுளாக வணங்குகிறார்கள். அவருக்கு இணையான மரியாதை லோகன் துரைக்கு. பென்னி குயிக், பெரிய அதிகாரி. அவருக்கும் மக்களுக்கும் இடையில் இருந்தவர்தான் லோகன் துரை. இவரது பெயரையும் தங்களது பிள்ளைகளுக்கு வைத்தார்கள். அணை கட்டித் திறக்கப்பட்ட இந்த 119 ஆண்டு காலத்தில் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்கள் செழிக்க, முல்லைப் பெரியாறு அணையே முழு முக்கியக் காரணம்.
கரிகாற்சோழன் காவிரியின் குறுக்கே கட்டிய கல்லணையும், பென்னி குயிக் கட்டிய முல்லைப் பெரியாறும் தமிழ் மக்களின் வளத்துக்கும் நலத்துக்கும் மட்டும் அல்ல; பாரம்பர்ய கட்டுமானத் திறமைக்கும் சான்றாக உயர்ந்து நிற்கின்றன. மன்னர் ஆட்சியிலும் காலனி ஆதிக்கத்திலும் கிடைத்த நன்மைகளை மக்களாட்சி காலத்தில் மண்ணில் போட்டுப் புரட்டிக்கொண்டு இருக்கிறோம் என்பதற்குச் சாட்சியாகவும் முல்லைப் பெரியாறு மாறிப்போனது. பல்லாயிரம் கிலோமீட்டர் கடல் கடந்து வந்தவனுக்கு, தேனி கூடலூரும் இடுக்கி குமுளியும் ஒரே ஊராகத்தான் தெரிந்தன. ஆனால், நாட்டுப்பற்று உள்ள இந்தியர்களுக்குத்தான் கூடலூரும் குமுளியும் 'வேறு வேறு நாடுகளாகத்’ தெரிகின்றன. மற்ற அனைவரின் பிரச்னைகளிலும் இந்தியர்களாக முடிவெடுப்பவர்கள்